சென்னை: தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவின் நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 104வது பிறந்தநாள் நேற்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
திரைப்படத்துறையிலும் அரசியலிலும் இறுதிவரை வெற்றிமேல் வெற்றி பெற்று கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தமிழில் புகழாரம் சூட்டினார்.
"பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு எனது புகழ் வணக்கம்," என்று பிரதமர் தெரிவித்தார்.
எம்ஜிஆர் திரையுலகிலும் அரசியலிலும் பரவலாக மதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவர் முதலமைச்சராக இருந்தபோது வறுமையை ஒழிக்க வும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கியதாகவும் கூறினார்.
எம்ஜிஆரின் பிறந்தநாளை அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் விமரிசை யாகக் கொண்டாடினர்.
'தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்' என்று அறைகூவல் விடுத்து முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக அலு வலகத்தில் சபதம் ஏற்றனர்.
கட்சி அலுவலகத்தில் அமைந்து உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினர். மாநிலம் முழுவதும் கட்சியினரும் எம்ஜிஆர் ரசிகர்களும் தங்கள் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.

