உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் வீரர் களைத் தூக்கி வீசி பந்தாடிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜனவரி 16ஆம் தேதி நடந்த இப்போட்டியில் எட்டு காளைகளை அடக்கி நான்கு தங்கக் காசுகளைப் (படம்) பரிசாகப் பெற்ற வீரர் ஒருவருக்கு போலித் தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோல மேலும் பல வீரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட தங்கக்காசுகளைப் பரிசோதனை செய்ததில் இந்த விவரம் தெரிந்து, வேதனையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், குறவன் குளத்தைச் சேர்ந்த விஜயன், 24, எட்டு மாடுகளைப் பிடித்து, நான்கு காசுகளைப் பரிசாக வென்றார்.
அந்த தங்கக்காசுகளை நேற்று முன்தினம் அவர் அருகில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து பரிசோதனை செய்ததில் அவை தரமற்றவை என்பதும் தங்கத்தின் அளவு மிகமிகக் குறைவாகவும் செம்பும் இரும்பும் அதிகளவில் இருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து மாடுபிடி வீரர் விஜயனின் தந்தை கணேசமூர்த்தி கூறுகையில், ''எனது மகன் நான்கு காளைகளைச் சிறப்பாக அடக்கி யதற்காக ஒரு கிராம் எடையுள்ள நான்கு தங்கக்காசுகளைப் பரிசாகப் பெற்றார். போட்டியின்போது காயம் அடைந்ததால் களத்திலிருந்து வெளியேறினார்.
"இந்த தங்கக் காசுகளை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தேன். அப்போது அவற்றில் மொத்தமாக சேர்த்து ஒரு கிராம் அளவுக்குக் கூட தங்கம் இல்லை. செம்பும் இரும்பும்தான் மிக அதிகளவில் கலந்திருப்பதாக நகைக்கடைக்காரர் தெரிவித்தார்," என்றார்.
மாடுபிடி வீரர் விஜயனின் தந்தை கணேசமூர்த்தி
முதல்வர் கையால் வழங்கிய தங்கக் காசுகள் போலி என்றதும் அதிர்ச்சியாக இருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் காசுக்காகவோ, பணத்திற்காகவோ விளையாடாமல் வீரத்தை நிலை நிலைநாட்டவே உயிரைப் பணயம் வைத்து களமிறங்குகின்றனர். பாரம்பரியமுள்ள இந்த விளையாட்டில் வீரர்களுக்கு இதுபோன்ற பரிசுப்பொருட்களை போலியாக வழங்கியது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

