சசிகலாவைச் சேர்க்க முடியாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

சசிகலாவைச் சேர்க்க முடியாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

2 mins read
db249989-3c32-4715-9369-9e893c8f3b22
படம்: ஊடகம் -

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இம்மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, அவர் வெளியில் வந்ததும் அதிமுக அவர் வசமாகிவிடும் என்றும் அதிமுக-அமமுக இணைக்கப்படலாம் என்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், இருநாள் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்புகளின்போது அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனக் கூறிய முதல்வர், தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் சொன்னார்.

"நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பிரதமரிடம் வலியுறுத்தினேன். இம்மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிதி கோரப்பட்டுள்ளது.

"இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அந்நாட்டின் வசமுள்ள நம்முடைய மீனவர்களின் படகுகளை மீட்டு ஒப்படைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அவரும் உறுதியளித்து இருக்கிறார்," என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

அப்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டதற்கு, "ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. சசிகலா சிறைவாசம் முடிந்து விடுதலை செய்யப்பட்டாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவரை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பே இல்லை. அவருடன் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுகவிற்கு வந்துவிட்டனர்," என்று முதல்வர் பதில் உரைத்தார்.

குறிப்புச் சொற்கள்