சென்னை: மாமல்லபுரத்தில் கலாசார விழா மீண்டும் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சுற்றுலா துறை சார்பில் அங்கு சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாசார கலைவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இவ்வாண்டுக்கான வார இறுதி கலாசார கலை விழா மாமல்லபுரம் பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் நேற்று முன் தினம் தொடங்கியது.
மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ச.ராஜாராமன் தலைமையில் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ஜெ. ராஜேந்திரன் முன்னிலையில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. எஸ்.செல்வம் குத்து விளக்கேற்றி கலாசார கலை விழாவை தொடங்கி வைத்தார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் மீனாட்சி ராகவன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் திருவண்ணாமலை மகேந்திரன் குழுவினரின் தப்பாட்டம், கிராமிய நடன நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் சங்க மூத்த தலைவர் எம்.கே. சீனிவாசன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழா பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெறும்.

