கோவை: கல்லூரி மாணவர்களின் உருவாக்கத்தில் 'ஸ்ரீசக்தி சாட்' பிஎஸ்எல்வி சி-51 என்ற செயற்கைக்கோள் தயாராகி உள்ளது.
இந்த செயற்கைக்கோள் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண் வெளித்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நகராட்சி பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் கசிவு, எரிவாயு கசிவு, காட்டுத்தீ, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் தீவிபத்து, வங்கிகளில் நடக்கும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் இந்த செயற்கைக்கோள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கோவை மாவட்டம், நீலாம்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்தான் இந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.
இந்தக் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற செயற்கைக்கோள் தரைதள கண்காணிப்பு நிலையத்தை 'வீடியோ கான்பரன்சிங்' வழி இஸ்ரோ தலைவர் சிவன் தொடங்கி வைத்துப் பேசினார்.
"கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ள செயற்கைக்கோள் இஸ்ரோ தளத்தில் இருந்து ஏவப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது. இனிவரும் காலங்களில் விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது,'' என்றார்.
ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் தங்கவேலு கூறுகையில், "2010ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியிலேயே ஒரு செயற்கைக்கோள் ஆய்வகத்தை அமைத்தோம். "இதன் பலனாகவே இந்த 'ஸ்ரீசக்தி சாட்' செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளோம். இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளும் அவ்வப் போது தேவையான உதவிகளை வழங்கினர்," என்றார்.