தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் திரு வண்ணாமலை மாவட்டத்தில் இருந்தபடி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கினார்.
இங்குள்ள கீழ்பெண்ணாத்தூரில் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்ற பெண்கள் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.
அத்துடன், கேரள செண்டை மேளம், பறை இசையுடன் கூடிய வரவேற்பும் ஸ்டாலினுக்கு அளிக்கப் பட்டது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் காரசாரப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
திமுக சார்பில் இதுவரை 22,000 மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி உள்ளதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இதன் அடுத்த கட்டமாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் முழக்க வாசகத்துடன் திருவண்ணாமலையில் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இன்னும் 30 நாள்களில் தமிழ கத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, "அதிமுக-பாஜக உறுதியான கூட்டணி. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதில் காலதாமதம் ஏற்படுகிறதே தவிர, இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் விரிசல் ஏற்படலாம்," என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், குறைந் தது 200 தொகுதிகளிலாவது திமுக போட்டியிடவேண்டும் என்று திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
இதையடுத்து, மீதமுள்ள 34 தொகுதிகளைத்தான் கூட்டணி கட்சிகளுக்குப் பங்குபிரித்து தர வேண்டும் என்ற தலைவலியும் திமுகவுக்கு உள்ளது.
ஏற்கெனவே காங்கிரசுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற ஒரு புதிய தகவலும் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறமிருக்க, திமுக கூட்டணியில் ஏற்கெனவே முரண்டு பிடித்துக்கொண்டிருக்கும் மதிமுக, விசிக ஆகிய இரண்டு கட்சிகளும் அரண்டு போகும் விதமாக அவர் களுக்கு இரு தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால், ஆரம்பம் முதலே திமுகவிடம் இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்டு போராடி வரும் மதிமுகவும் விசிகவும் அதிருப்தி அடைந்துள்ளன.
அத்துடன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா மூன்று சீட்டுகள் வழங்கப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

