பெங்களூரு சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார்.
சிறையிலிருந்து விடுவிக்க சில நாட்களே ஆன நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பத்து நாட்களுக்கும் மேலாக கொரோனாவிற்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை தேறி நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அடுத்த சில நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையொட்டி ஒசூர் எல்லையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி சில நாட்கள் சசிகலா ஓய்வெடுப்பார் என்று தெரிகிறது. இதன் பிறகு அவர் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவை அழைத்துச் செல்ல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விவேக் மற்றும் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு வந்திருந்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுக கொடி ஏற்றப்பட்ட காரில் பயணம் செய்ததால் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே அமமுக பொதுச் செயலாளர் தினகரன், "அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா சென்ற காரில் அதிமுக கொடி இருக்கிறது. ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டு டெடுக்கும் பணி தொடரும்," என்று கூறியுள்ளார்.

