எச்சரித்த காவல் ஆய்வாளரை சரக்கு வேனில் மோதிக் கொன்ற இளையர் சரண்; ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர்

எச்சரித்த காவல் ஆய்வாளரை சரக்கு வேனில் மோதிக் கொன்ற இளையர் சரண்; ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர்

2 mins read
8bc15e19-2942-432f-90f1-c7c21e16cd09
உதவி காவல் ஆய்வாளர் பாலுவை (வலது) சரக்கு வேனால் மோதிக் கொன்ற முருகவேல் (இடது). படங்கள்: தமிழக ஊடகம் -

தூத்துக்குடி அருகே ஏரல் காவல் ஆய்வாளரை கொலை செய்த இளையர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பாலு, 56, ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். அவர், நேற்று இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, மதுக்கடையில் தகராறு செய்வதாகக் கிடைத்த புகாரின் பேரில் அங்கு சென்று, தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு காவலரான திரு பொன்சுப்பையாவுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் ரோந்துப் பணியைத் தொடர்ந்தார்.

ஆத்திரமடைந்த முருகவேல், இன்று அதிகாலை வேளையில் சரக்கு வேனை ஓட்டிச் சென்று காவலர்கள் சென்ற வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கொற்கையில் வீட்டுக்கு அருகிலேயே இருசக்கர வாகன பழுது நீக்கும் நிலையம் வைத்து முருகவேல் நடத்தும் தகவலும் பெறப்பட்டது.

மேலும், முருகவேலைப் பிடிக்க போலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், முருகவேல் இன்று காலை விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி சரவணக்குமார் விசாரணை நடத்தி, முருகவேலை வரும் வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர், ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் அறிவித்தார்.

மேலும், காயம்பட்ட மற்றொரு காவலரின் சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கவும் முதல்வர் ஆணையிட்டார்.

குறிப்புச் சொற்கள்