சென்னை: எப்போது பார்த்தாலும் என்னை 'மீம்ஸ்'களில் பரட்டை பரட்டை என்று போடுகிறார்கள். '16 வயதினிலே' படத்தில் நடித்திருந்த ரஜினிக்குப் பிறகு 'பரட்டை' என மக்களிடம் அதிகம் பெயர் வாங்கியது நான்தான் என நினைப்பதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "பரட்டை தலைக்காரி, கறுப்பு நிறம் என்றெல்லாம் என்னைப் பலரும் விமர்சித்துள்ளனர்.
"என் தலைமுடி சுருட்டை என்றாலும் நான் யாருடைய பணத்தையும் சுருட்டியது இல்லை. அதேபோல் நான் கறுப்பு நிறம்தான், எனினும் என் கையில் கறுப்புப் பணமில்லை," என்று கூறினார்.
தன்னை அடிக்கடி 'மீம்ஸ்'களில் கலாய்ப்பது குறித்து அவர் பேசிய போது, "ஒருமுறை நான் விமா னத்தில் செல்லும்போது அருகில் அமர்ந்திருந்த சகோதரர் ஒருவர் தன்னை 'மீம்ஸ் போடுபவர்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
"உடனே நான், எல்லோரும் ஏன் என்னை மட்டும் 'மீம்ஸ்' போடுகிறீர்கள்? வேறு யாரும் கறுப்பா, குள்ளமா, சுருட்டை முடி யுடன் இல்லையா?'' என்றேன்.
"அக்கா உங்களை 'மீம்ஸ்' போட்டால்தான் அதிகம் பேர் பார்க்கிறார்கள். அதிக 'வியூஸ்' வந்தால்தான் வருமானம் வரும்," என்றார். விமானத்தில் இருந்து இறங்கும்போது "அக்கா மன்னிச்சிடுங்க. இனிமேல் உங்களை 'மீம்ஸ்' போடமாட்டேன்," என்றார்.
ஆனால், நானோ "எனக்கு அவமானம் வருகிறது என்றாலும் உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் நீங்கள் தொடருங்கள். என்னால் யாருக்காவது உதவி, வரு மானம் கிடைத்தால் அதில் எனக்கு மகிழ்ச்சியே என்றேன்," என்றார்.

