தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பி, தொழில் தொடங்க விரும்பும் தமிழகத்தவர்களுக்கு கடனுதவி அளிக்க அரசாணை வெளியீடு

2 mins read
31592e97-916b-4851-bc94-a571e155c1c9
சென்னை விமான நிலையம். படம்: ஊடகம் -

புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு திரும்பி, புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கும் தமிழர்களுக்குக் கடனுதவி அளிக்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1.1.2020-க்கு பின்னர் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய, புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில்முனைவோர், தங்களது மாவட்டத்திலுள்ள மாவட்டத் தொழில் மையம் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகலாம்.

இதுதொடர்பாகப் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவல் காரணமாக 2020 / 2021-ம் ஆண்டுகளில் வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர் தமிழ்நாடு திரும்பி உள்ளார்கள். 31.01.2021 வரை 3,66,890 வெளிநாடு வாழ் தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து விமானம் / கப்பல் மூலமாக தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

"வெளிநாடுகளில் பணிபுரிந்த பெரும்பாலானோர் வெவ்வேறு துறைகளில் திறன் பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் பணிபுரிந்து பலதுறைகளிலும் திறன் பெற்றோர், இத்திறனை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் புதிய தொழில் துவங்க ஏதுவாக அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.

"தமிழ்நாட்டில் தொழில் துவங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு 'புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்' (NEEDS)-என்ற திட்டத்தை மாவட்டத் தொழில் மையம் வாயிலாகத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

"வெளிநாடுகளிலிருந்து திரும்பியுள்ள தமிழர்களின் நலனுக்காக 'புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்' (NEEDS)-திட்டத்தில் சில சலுகைகள்/ தளர்வுகளுடன் New Entrepreneur-cum-Enterprise Development Scheme" - Special Initiative for Migrants (NEEDS-SIM) என்ற திட்டத்தின்கீழ், வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பி, புதிதாகத் தொழில் தொடங்குவோருக்குத் தொழில் தொடங்கக் கடனுதவி அளிக்க அரசு முடிவு செய்து, இதற்கான ஆணைகள், அரசாணை (நிலை) எண்.84, பொது (மறுவாழ்வு) துறை, நாள் 5.2.2021-ல் வெளியிடப்பட்டுள்ளது.

1.1.2020-க்கு பின்னர் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய, புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில்முனைவோர், தங்களது மாவட்டத்திலுள்ள மாவட்டத் தொழில் மையம் / மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி, இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்