புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட வாடிக்கையாளருடன் சண்டை; வாடிக்கையாளர் மரணம், கடைக்காரர் கைது

புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட வாடிக்கையாளருடன் சண்டை; வாடிக்கையாளர் மரணம், கடைக்காரர் கைது

1 mins read
2258a79a-0c55-4dc8-ad81-411e10111f7e
படம்: இணையம் -

புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட நபருக்கும் கடைக்காரர்களுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியதில் குருமா கேட்டவரின் பின்னந்தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 28. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில், அதே பகுதியில் உள்ள கெளமாரி மெஸ் என்ற கடையில், புரோட்டா வாங்கச் சென்றார்.

புரோட்டாவுக்கு குருமா அளித்ததுபோக கூடுதலாக 2 பொட்டலம் குருமா கேட்டாராம் ஆரோக்கியராஜ். மேலும் ஒரு பொட்டலம் குருமா கொடுத்த கடைக்காரர் அதற்கு மேலும் கொடுக்க முடியாது என்று கூறவே, வாய்த்தகறாராகி, பின்னர் கைச்சண்டையானது.

கடையில் இருந்து புரோட்டா, குருமா எல்லாம் கீழே விழுந்து சிதறியது. ஆனாலும் சண்டை தொடர்ந்தது.

கடை உரிமையாளர் கரிகாலன் மற்றும் கடையில் வேலை செய்த மற்ற இருவர் ஆகியோர் சேர்ந்து ஆரோக்கியராஜுடன் சண்டை போட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஆரோக்கியராஜின் பின்னந்தலையில் அடிபட்டது. அந்தப் பகுதி மக்கள் சண்டையை விலக்கி ஆரோக்கியராஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆரோக்கியராஜ் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலிசார் நடத்திய விசாரணையில், அந்தக் கடையின் வாடிக்கையாளரான ஆரோக்கியராஜ், அடிக்கடி அங்கு கடன் வைப்பதும் பின்னர் பல நாள்கள் கேட்ட பிறகு திருப்பிச் செலுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் தொடர்பில் கரிகாலனும் ஒரு ஊழியரும் கைதாகினர். மற்றொரு நபரை போலிசார் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்