தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சகாயம்: தமிழகத்தைக் காக்க அரசியலுக்கு வருகிறேன்

2 mins read
bcf42e5e-cd97-4043-ab05-1bc407f2fba3
சகாயம் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்றும் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். படம்: ஊடகம் -

அரசியலில் ஈடுபட்டால் தனது நேர்மைக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி அரசியலுக்கு வருவதை தவிர்த்ததாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

அதிகாரம் இருந்தால்தான் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று 'ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்' எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழகம் தற்போது ஊழலில் சிக்கித் தவிப்பதாக கவலை தெரிவித்த சகாயம், தமிழகத்தை மீட்டெடுக்க புதிய மாற்றத்தை நோக்கி அனைவரும் செல்ல வேண்டும் என்றார்.

"அரசுப் பணியில் 29 ஆண்டுகள் நீடித்தபோது நேர்மையாக பணியாற்றி உள்ளேன். ஆனால் அவமானங்களும் பணிமாறுதல்களும்தான் எனது நேர்மைக்கு கிடைத்த பரிசுகள்.

"மதுரை ஆட்சியராகப் பணியாற்றியபோது கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால், பணிமாறுதல் செய்யப்பட்டு அதிகாரமற்ற பணிக்கு மாற்றப்பட்டேன்.

"அங்கு ஏழு ஆண்டுகள் செயலற்று இருந்தேன். இதை எல்லாம் இதற்கு மேல் தாங்கமுடியாது என்று எண்ணி விருப்ப ஓய்வு பெற்றேன்," என்றார் சகாயம்.

ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் தாம் அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அவதூறுகள் பரப்பப்பட்டன என்றும் உண்மையில் அந்த நடிகர்களுடன் தாம் தொலைபேசியில் கூட பேசியது இல்லை என்றும் சகாயம் தெரிவித்தார்.

காமராஜர், கக்கன், அண்ணா ஆகிய தலைவர்கள் போல நேர்மையாகவும் எளிமையாகவும் இருந்தால் சாதி, மத வேறுபாடுகளை உடைத்தெறியும் லட்சியவாதியாக இருந்தால், அரசியல் களம் காணலாம் என்று குறிப்பிட்ட அவர், புதிய சமுதாயம் அமைத்திட மக்கள் புறப்பட்டால், அதற்கு தாம் வலதுகரமாக இருந்து துணை நிற்கத் தயார் என்றார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளின் பக்கம் நியாயம் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சகாயம் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்றும் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்