பாம்பன் கடற்கரையில் மீனவர்கள் பிடித்து வந்த மீன் ஒன்று ரூ.10,000க்கு விலைபோனது.
பாம்பன் தென் கடல் பகுதியில் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் வலையில் கோபியா என்ற அரியவகை மீன் ஒன்று சிக்கியது. இந்த ஒரு மீன் மட்டும் ரூ.10,000க்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மீனைப் பற்றி மரைக்காயர் பட்டினம் மீன் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கோபியா மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து, கடலில் பாத்தி கட்டு செயற்கை முறையில் வளர்ப்பது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளித்தது. இதையடுத்து, கோபியா மீன் குஞ்சுகளைக் கடலில் விட்டு மீன்வளத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. கோபியா மீன்கள் இந்தியா போன்ற வெப்பப் பிரதேச நாடுகளில் மிக வேகமாக வளரும். அதிகபட்சம் 60 கிலோ வரையிலும் கூட வளரும். இந்த மீன்களுக்கு உலக நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.
"புரதச்சத்து நிறைந்த இந்த மீன்களை கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் போட்டிபோட்டு வாங்குவதால் இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன," என்றார்.

