கடந்த 34 வருடங்களாக கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதன், தான் பணியாற்றும் பேருந்தில் ஏறும் பயணிகளிடம் இலவசமாக செடிகளை வழங்கி, அதை அவர்களது வீட்டில் வளர்த்து ஆளாக்கும் படி கோரிக்கை விடுக்கிறார்.
மர மனிதன் என்றழைக்கப்படும் மாரிமுத்து யோகநாதன், தனது சம்பளத்தில் 40%ஐ விதைகள், மரக்கன்றுகளை வாங்குவதற்காகவே ஒதுக்கி வருவதாகவும் இதற்குத் தனது குடும்பத்தினரும் ஆதரவு தருவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் 3,000க்கும் மேலான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதுபோல் 34 ஆண்டுகளாக சளைக்காமல் மரக்கன்றுகளை வழங்கும் பணியில் ஒருவரால் ஈடுபட முடியுமா என வியக்கும் மக்கள், மாரிமுத்து யோகநாதனை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
கோவை முழுவதும் பசுமையாக காட்சி அளிக்க வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
முன்னாள் துணை அதிபர் ஹமீத் அன்சாரியிடமிருந்து எகோ வாரியர் விருதும் தமிழக அரசின் சத்ரு சுஜால் சேவை வீரர் உள்ளிட்ட விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

