தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வழக்கம்போலவே இந்த ஆண்டும் தனித்துப் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர் களை களமிறக்க உள்ளார்.
மொத்தமுள்ள 234 வேட்பாளர்களில் 50% அதாவது, 117 வேட்பாளர்கள் பெண்களாகவும் 117 வேட்பாளர்கள் ஆண்களாகவும் போட்டியிட உள்ளனர்.
இதற்கிடையே, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று உரக்க சவால் விட்டு வந்த சீமான், இப்போது தனது சவாலில் இருந்து பின்வாங்கி உள்ளார்.
அத்துடன், சீமான் சென்னையின் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக சீமான் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அவரை வீழ்த்துவேன் என சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில், "ஒருவரை எதிர்த்து வெல்வதைக் காட்டிலும் என் மக்களைக் காப்பதே முக்கியம் என்பதால் திருவொற்றியூரில் நிற்கிறேன்," என கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவராக விளங்கும் காளியம்மாள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு 60,515 வாக்குகளைப் பெற்றார்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் பூம்புகாரில் போட்டியிடும் இவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.