சென்னை: சென்னையில் 14 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டு வருகிறது.
சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இதில் 11 தொகுதிகள் ஏற்கெனவே திமுக வசமுள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் சென்னை திமுக கோட்டையானது. அந்தத் தேர்தலில் ராயபுரம், விருகம்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய நான்கு தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. ஆர்.கே.நகர் தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெற்றிபெற்றார்.
சென்னையில் திமுக வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தன. இந்த சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியிருந்தாலும் தமிழகம் முழுவதும் திமுக அதிக இடங்களில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 14 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தவும் அது முடிவு செய்துள்ளது.
தற்போது உள்ள 11 தொகுதி களில் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.
அதே சமயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் ஒதுக்கிவிட்டு மற்ற இடங்களில் திமுக போட்டியிட விரும்புகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இதற்கிடையே கூட்டணிக் கட்சி களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில்கூட உதய சூரியன் சின்னத்தில் நிற்க வைக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் மற்ற தொகுதிகளில் திமுகவே போட்டியிடும்.

