சென்னை: "வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது,'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடக்க உள்ளது. வாக்குப் பதிவிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக மக்களிடம் தவறான தகவல் பரவி வருகிறது.
அரசியல் கட்சிகளின் தவறான பிரசாரங்களால், வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "வாக்குப் பதிவு முடிந்த பின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டிய அறையில் வைக்கப்படும். அந்த அறையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் புளுடூத், ரிமோட், ரேடியோ அலைகள் என எந்த விதமான எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டும் முறைகேடு செய்ய முடியாது. இதை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளது," என்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் நவீன வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இவை அனைத்தும் அண்மையில் தயாரிக்கப்பட்டவை. உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தேர்தல் பணிக்கு 150 பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் 14 போலிஸ் பார்வையாளர்கள், 118 செலவினப் பார்வையாளர்கள், 19ஆம் தேதிக்கு முன் தமிழகம் வரவிருக்கின்றனர்.
திமுக தரப்பில், இல்லத்தரசி களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த திரு சத்யபிரதா சாஹு, "திமுக,வின் வாக்குறுதி தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக புகார் வந்தால் அது குறித்து தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கட்சியிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்," என்று கூறினார்.

