சரத்: கமல் விரும்பியதால் கூட்டணியில் இணைந்தோம்

சரத்: கமல் விரும்பியதால் கூட்டணியில் இணைந்தோம்

2 mins read
c64eefc0-bd84-4e5d-8e7a-30e03dc58b7e
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இணைந்த சரத்குமார். படம்: தமிழக ஊடகம் -

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைய வேண்டும் என கமல்ஹாசன் விரும்பியதாக சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் குறித்து தாம் எந்தவொரு தனிப்பட்ட விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்றும் நடிகர் சங்கத்தில் இருந்தபோது கமல்ஹாசன் குறித்து தாம் பேசியது அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து 40 தொகுதிகளில் களமிறங்குகிறது சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி.

இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், அதிமுகவின் கிளை போன்று செயல்படுவதால் அமமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

"அரசியலில் வெற்றி, தோல்வி இருக்கும். தோல்வியடைந்தால் மீண்டும் அரசியலுக்கு வருவதில் தயக்கம் நிலவுகிறது. ஆனால், தேர்தலைச் சந்திக்க வேண்டும் என நான் முடிவெடுத்தேன்.

"நடப்பு அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக, அவர்களுடனேயே பயணித்தோம். அதில் நான் பயன்படுத்தப்பட்டேன். ஆனால் எங்கள் தனித்துவம் போய்விட்டது. எங்கள் விகிதாச்சாரத்தை தெரிந்துகொள்ள வெளியேறி உள்ளோம்," என்றார் சரத்குமார்.

திமுகவுடன் அடிப்படையான நாகரிகத்துடன் தாம் பழகி வருவதாக குறிப்பிட்ட அவர், சமக தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என திமுகவில் யாரும் கருதவில்லை என்றார்.

"தேர்தலில் தனியாக நிற்பதென்பது வேறு. சீமான் நிற்கிறார். அந்த நிலைமை வேறு. விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டபோது இருந்த அரசியல் சூழ்நிலை வேறு.

"சீமானைக்கூட அழைத்துப் பேசினேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. கமலிடம் பேசியபோது அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் இணைந்தோம்," என்றார் சரத்குமார்.

சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்ததாக குறிப்பிட்ட சரத்குமார், அரசியலில் இருந்து சசிகலா விலகுவார் என்பதை தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

சசிகலாவுடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து தாம் பேசவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"குறிப்பிட்ட ஒரு விஷயம் தொடர்பில் முன்பு பேசிய கருத்துகளை இறக்கும் வரை நினைவில் வைத்திருந்தால் நான் மனிதன் கிடையாது. நடிகர் ரஜினி குறித்து காலஞ்சென்ற நடிகை மனோரமா ஒருமுறை கடுமையாகப் பேசியுள்ளார். அதன்பிறகு ரஜினி தன் படங்களில் மனோரமாவை நடிக்க வைத்தார். இப்படி சில சமயங்களில் கோபம் வெளிப்படவே செய்யும். அதை மறக்க வேண்டும். வைகோ திமுகவை விமர்சித்தது இல்லையா?," என்றார் சரத்குமார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.