சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள், பெண்கள், முதியோர், விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஏராளமான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையாக ஆளும் அதிமுக வெளியிட்டுள்ளது.
குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு மனையுடன் இலவச வீடு, பெண்களின் பணிச்சுமையைக் குறைக்க குடும்ப அட்டைதாரர்களுக்குத் துணி துவைக்கும் இயந்திரம், இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் அறிவிப்புகள் இடம்ெபற்றுள்ளன.
"பெற்றோரின் நலனைக் காக்கும் வகையில் மாணவா்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்லூரி மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் '2 ஜிபி' இணைய இணைப்பு ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.
"கல்லூரி மாணவிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்," என அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது.
"இனி 'ரேஷன்' பொருள்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்.
"குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டணமில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50% சலுகை வழங்கப்படும்," என பெண்களுக்கான சிறப்பம்சங்களும் அறிக்கையில் அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது.
"விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதியாக வழங்கப்படும்," என்று அதிமுக சலுகை களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல வீடுகளில் கழிவறையே இல்லாத நிலையில், அதனைச் சரிசெய்யாமல் இலவச மாகத் துணி துவைக்கும் இயந்திரம் கொடுப்பேன் என்பது நகைச்சுவை யாக உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
"சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறை வேற்றாதவர்கள், இந்தத் தேர்தலில் மட்டும் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறார் கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாள ரும் முதல்வருமான பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் ஞாயிறன்று இரவு சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். இதில் ஏராளமான கவர்ச்சி கரமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
படம்: ஏஎஃப்பி

