சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் நேற்றைய முகூர்த்த தினத்தில் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
ஆளுங்கட்சியின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநில எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேற்று தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின், பிரசாரத்தைத் தொடர்ந்தனர்.
தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம், எடப்பாடியில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை தமது மனுவைத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற் ெகாள்ளவும் திட்டமிட்டிருந்தார்.
மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் களமிறங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதன்பின், அங்கு வசிக்கும் மக்ளிடையே வாக்கு சேகரித்தவர், உடனடியாக திருவாரூர் புறப்பட்டுச் ெசன்றார். அங்குள்ள தெற்கு ரத வீதியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், மன்னார்குடி, நன்னிலம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
இதற்கிடையே, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் நேற்று அவரவர் தொகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இம்மாதம் 19ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டு, மார்ச் 20ல் இவை பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். படங்கள்: தமிழக ஊடகங்கள்

