சென்னை: அறுபது தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமமுக இப்போது தனது தேர்தல் பரப்புரையை முடுக்கி விட்டுள்ளது.
குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
எப்பாடுபட்டாவது வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில் டி.டி.வி. தினகரன் முனைப்புடன் உள்ளார். அமமுக மகத்தான வெற்றி பெறும். அப்போது, நாம் இழந்த அதிமுகவை மீட்டெடுப்போம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
தேர்தலுக்காக அயராது பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்ய டி.டி.வி. தினகரன் திட்டமிட்டுள்ளார். அவர் தன் முதல்கட்டப் பரப்புரையை நேற்று மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள திருவெற்றியூர்த் தேரடியில் தொடங்கினார்.
தொடர்ந்து பொன்னேரி, மாதவரம், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி குமணன்சாவடி சந்திப்பு, மதுரவாயல், போரூர் பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இன்றைக்கும் சென்னையின் பல பகுதிகளில் பரப்புரை செய்கிறார்.
பின்னர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் அமமுகவிற்கு வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக உள்ளது. இந்தத் தேர்தலுக்கு பிறகு அதிமுக சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அமமுக பக்கம் இருக்கின்றனர். எனவே, அதிமுகவை மீட்போம். அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா கூறியது அவரது விருப்பம். ஆனால் தேர்தலுக்குப் பிறகு சசிகலாவை, மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துவேன் என்று கூறினார்.
இதன்மூலம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சசிகலாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

