சென்னை: விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளுக்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போது விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற திரு முத்தரசன் இவ்வாறு தெரிவித்தார்.
"தமிழகத்தேர்தலை அரசியல் போராட்டக் களமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. முதல்வர் பழனிசாமியின் திட்டங்கள், அறிவிப்புகள் யாவும் ஏட்டிக்குப் போட்டியாகவே உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக, தான் செய்யாத திட்டங்களை எல்லாம் இப்போது செய்வதாக வாக்குறுதி அளித்து வருகிறார். கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளுக்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர், தற்போது கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வதாகக் கூறி வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது அதற்கான ஆணையத்தின் காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம் எனக் கூறி பிரச்சினையைத் திசைதிருப்பப் பார்க்கிறார் பழனிசாமி. தன்னுடைய பதவிக்கு ஏற்ப கருத்துகளை முதல்வர் பேசவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் பேசும் முறைகளும் விமர்சனங்களும் அரசியலுக்கு உகந்ததாக இல்லை, எனவேதான் இந்தத் தேர்தலை அரசியல் போராட்டம் நிறைந்த தேர்தலாகப் பார்க்கிறோம். அதிமுக, தன்னுடைய பலம், தேர்தல் அறிக்கை, கூட்டணி பலம் ஆகியவற்றை நம்பி இல்லை. பணத்தால் வென்றிடலாமென பகல் கனவு காண்கிறது. இப்போது அது மக்களிடம் எடுபடாது.
பண விநியோகத்திற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். அதற்கு உதாரணம்தான் வேளாண் துறை அமைச்சர் இறந்தபோது நடைபெற்ற சம்பவங்கள். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்னும் அதிமுகவின் கனவு பகல் கனவாகத்தான் போகும்,'' என்று முத்தரசன் தெரிவித்தார்.

