சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500க்கு கீழ் பதிவானது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக 1.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இதனால் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முகக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 476 ஆண்கள், 360 பெண்கள் என மொத்தம் 836 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், செங்கல்பட்டில் 81 பேரும், கோவையில் 70 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 38 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 165 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். அந்தவகையில் சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினத்தில் தலா ஒருவர் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 12 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 553 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 50 நாட்களுக்குப் பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், கோவையில் 49 பேரும் அடங்குவர்.

