கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் பலரும் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த வேட்பு மனுத் தாக்கல் நாளை 19ஆம் தேதி வரை தொடர உள்ளது. இம்மனுவில் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டு வருகின்றன.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு அசையும் அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.176.9 கோடி சொத்துகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ரூ.49.5 கோடிக்கு கடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வேட்பு மனுவில், வதந்திகளைப் பரப்புதல், மத உணர்வுகளைத் தூண்டுதல் உள்ளிட்ட 17 வழக்குகள் தன் மீது நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியின் முதலீடுகள் ரூ.1.75லட்சம். 26 லட்சம் மதிப்பில் கார், மனைவியின் பெயரில் 11 லட்சம் மதிப்பில் கார், சீமானிடம் தங்கம் 150 கிராம், அவரது மனைவியிடம் 1,600 கிராம் தங்கம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பெயரில் ஏறக்குறைய ரூ.27 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளும் மனைவி பெயரில் ரூ.1 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளதாகக் கூறியுள்ளார்.

