செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ac0f89c4-c648-4a57-8169-997f4c9c60f3
-

ராஜதந்திரத்துடன் பொன்னாடை போர்த்தி வாக்கு சேகரிக்கும் அமைச்சர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 2வது முறையாகப் போட்டியிடுகிறார்.

இவர், கடந்த ஐந்தாண்டுகளாக தனக்கு போர்த்தப்பட்ட சால்வைகள், பொன்னாடைகளைப் பத்திரமாக வைத்திருந்து, அவற்றை ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு பொன்னாடை போல் போர்த்தி வாக்கு சேகரித்தார். ராமச்சந்திரனின் இந்த ராஜதந்திர யுத்தியால் மக்கள் நெகிழ்ந்து போனதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சிலர் பொன்னாடையைப் பெற்றுக்கொண்டு அந்த அரவணைப்போடு தங்களது கோரிக்கைகளையும் கூறினர்.

வாக்களிக்கும் நாளன்று பொது விடுமுறை

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

காங்கிரசில் நான்கு; பாஜகவில் மூன்று வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் சார்பில் இன்னும் நான்கு தொகுதிகளுக்கு அறிவிக்கப்படாமல் இருந்த வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி வேளச்சேரியில் ஹசான், மயிலாடு துறையில் ராஜ்குமார், குளச்சலில் பிரின்ஸ், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாஜகவில் மீதமுள்ள மூன்று தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, தளி தொகுதியில் நாகராஜன், உதகமண்டலம் தொகுதியில் போஜராஜன், விளவங்கோடு தொகுதியில் ஆர்.ஜெயசீலன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

சென்னை: சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக், பரோட்டா கடையில் பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்குகள் சேகரித்தார்.

கடந்த நான்கு நாட்களாக வேளச்சேரிக்கு உட்பட்ட தொகுதிகளில் வீடுவீடாக வாக்கு சேகரித்த அசோக், நேற்று தரமணி பகுதியிலுள்ள பெரியார் நகரில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பரோட்டா கடையில் பரோட்டா போட்டு கடை ஊழியர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். படம்: தமிழக ஊடகம்

அண்ணாமலை: அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளரான அண்ணாமலை, அவரது தொகுதி மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள்தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

"2026க்குள் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நான்கு பெரிய மத்திய தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து 40,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். இது சத்தியம். அப்படி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்," என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

கணவரது ஆட்டோவில் அமர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட பொன்னுத்தாயி, தனது தொகுதிக்கு ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். ஆட்டோவை அவரின் கணவர் கருணாநிதி ஓட்டிச்செல்கிறார். மிகவும் எளிமையான முறையில் அவர் வாக்கு சேகரிக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.