திருப்பூர்: புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில், ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று சேர்ந்து 78 கிலோ முடியைத் தானம் செய்துள்ளனர்.
திருப்பூரில் ஒரு விழாவாக இந்த நிகழ்வை நடத்தி உள்ளனர்.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும்போது நோயாளிகளுக்கு முடி உதிர்வது வழக்கம்.
'கீமோதெரபி' எனப்படும் கதிர் வீச்சு சிகிச்சை அளிக்கும்போது முடி அதிகளவில் கொட்டிவிடும்.
இதனால், புற்றுநோயாளிகளில் பலர் தங்கள் தன்னம்பிக்கையை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.
இந்நிலையில், இந்த பாதிப்புக்கு ஆளாவோருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பெண்கள் தங்கள் முடியைத் தானம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.
அப்படி, தானமாகப் பெறப்படும் தலைமுடி பெண்கள் சிகையலங்காரத்திற்குப் பயன்படும் 'டோப்பா'வாக தயாரிக்கப்படுகிறது. அதனைப் பயன்படுத்தும் நோயாளிகள் அழகிய கேசத்துடன் தங்களின் பழைய தோற்றத்தைப் பெறமுடிகிறது.
இந்த தன்னம்பிக்கையால் புற்றுநோயை வென்றவர்களும் அதிகமுள்ளனர். அவ்வகையில் திருப்பூரில் 1,000 பெண்கள் சேர்ந்து 78 கிலோ முடி தானம் செய்து சாதனை படைத்து உள்ளனர்.
கணியாம்பூண்டியில் உள்ள இந்திய மருத்துவர் சங்கத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
அந்த விழாவில் "திருப்பூர் செலிப்ரேசன் ரோட்டரி கிளப்" சங்கம் மூலமாக 78 கிலோ முடி புற்றுநோயாளிகளுக்காகத் தானமாகப் பெறப்பட்டது. இவ்விழா சாதனை நிகழ்ச்சியாகவும் பதியப்பட்டு சான்றிதழ்கள், பதக்கங்களும் சங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.

