தேர்தல் நடக்குமா என்பது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: மக்கள் அலட்சியமாக இருந்தால் கொரோனா கிருமித்தொற்று மேலும் அதிகரிக்கும் என்றும் அதைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு நிலையை அமல்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தலும் பிரசாரமும் எந்தளவு முக்கியமோ, அதற்கு இணையாக மக்களின் உயிரும் முக்கியம் என செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
"கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நம் பொறுப்பு. தற்போது அதிகரித்துவரும் கிருமித்தொற்று குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
"கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளன. தமிழகத்திலும் இரண்டாம் அலை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலை வரலாம்," என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் 945 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது உறுதியானது. இதனால் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்தபடி நடக்குமா எனும் சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெளிவுபடுத்தி உள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
"தேர்தல் நடந்தபோது பீகாரில் நாள்தோறும் 12 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு வந்தனர். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தேர்தலின்போது தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான ஆலோசனைகளை அரசு வழங்கும். அதை நாங்கள் அமல்படுத்துவோம். எனினும் அறிவித்தபடி தேர்தல் நடக்குமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை," என்றார் சத்யபிரத சாகு.

