சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுமார் 21 ஆயிரம் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது அனுமதியும் உரிமமும் இன்றி பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக காவல்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கைதானவர்களில் 166 பேர் முக்கிய ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 732 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 18,183 பேர் நன்னடத்தை பிணைய பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
"நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 14,343 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனிநபர் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த 18,593 துப்பாக்கிகள் திரும்ப பெறப்பட்டன.
"தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உரிமம் இல்லாமல் தனிநபர்கள் வைத்திருந்த 16 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன," என காவல்துறை தலைவர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெடிமருந்துகள், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மது கடத்தல், விற்பனை தொடர்பாக சுமார் 9 ஆயிரம் பேர் கைதானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக இதுவரை 65 பட்டாலியன் துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர்.