சென்னை: தேர்தல் களப் பிரசாரத்துக்கு திரையுலக நட்சத்திரங்களை அதிகளவில் பயன்படுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் வாக்காளர்களின் கவனத்தைக் கவர முடியும் என்று அக்கட்சித் தலைமை நம்புவதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இருபது தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக. இத்தொகுதிகளில் அண்மையில் கட்சியில் இணைந்த அனைத்து திரை நட்சத்திரங்களையும் பிரசாரம் செய்யுமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் திரையுலக, இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த பல பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கட்சியில் இணைந்த கையோடு ஆயிரம் விளக்குத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார் குஷ்பு.
இந்நிலையில் இருபது தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் திரையுலக, இலக்கிய பிரபலங்களின் பட்டியலை தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு பாஜக தலைமை அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி, நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, மதுவந்தி, நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், ராதாரவி, எஸ்.வி.சேகர், செந்தில், கணேஷ் (ஆர்த்தி) ஆகியோரும் முதல் கட்டப் பிரசாரத்தை வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளனர். பெரும்பாலானவர்கள் இடைவிடாமல் பிரசாரத்துக்கான இறுதி நாள் வரை களத்தில் வலம் வருவார்கள் எனத் தெரிகிறது.