ராமேசுவரம்: தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே கடலில் 13.35 மணி நேரம் நீந்தி முதல் முறையாக 48 வயது பெண் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.
இலங்கை தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலில் நீந்திச் செல்வதற்காக தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தைச் சேர்ந்த ஷ்யாமளா ஹோலி, கடந்த 18ஆம் தேதி ராமேசுவரம் சங்குமால் கடற்கரையிலிருந்து ஒரு விசைப்படகில் 14 பேர் கொண்ட குழுவுடன் தலைமன்னாருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தபடி, 19ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் நீந்தத் தொடங்கினார்.
அவருக்கு அனைத்துலக கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு வழங்கினர்.
அதைத்தொடர்ந்து, இந்திய கடல் பகுதிக்குள் நீந்தி வரும்போது கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் நீந்துவதில் ஷ்யாமளாவுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. இதனால் சற்று காலதாமதமாக வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணியளவில் 13.35 மணிநேரத்தில் தனுஷ்கோடி வந்தடைந்தார்.
தனுஷ்கோடி வந்தடைந்த ஷ்யாமளா ஹோலியை சமூக ஆர்வலர் களும் சுற்றுலாப் பயணிகளும் பொன்னாடை, மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்று கொண்டாடினார்கள். இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஷ்யாமளா ஹோலி தெரிவித்தார்.

