கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிவேகமாகப் பரவுகிறது; மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் புதிதாக 1,243 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 65,000ஐ கடந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 458 பேருக்கும், செங்கல்பட்டில் 134 பேருக்கும், கோவையில் 103 பேருக்கும் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரில் 87, தஞ்சாவூரில் 85, காஞ்சிபுரத்தில் 41, திருப்பூரில் 33 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று பாதிப்பால் சென்னையில் 2 பேர் உட்பட ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 12,590 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 7,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2020 டிசம்பருக்குப் பின், தற்போது இரண்டாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதால் இரண்டாவது அலை வீசுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
தமிழக அரசு தடுப்பூசிப் பணியையும் முடுக்கிவிட்டுள்ளது. சென்னையின் 6 மண்டலங்களில் சனிக்கிழமை ஒரே நாளில் 2,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்தார். இதுவரை சென்னையில் மட்டும் 4.15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 30 லட்சம் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், கோயம்புத்தூர் பகுதியில் கொவிட்-19 தொற்று அதிவேகமாகப் பரவுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையின் நகர்ப்பகுதி, கிராமப்புறங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தொற்று மீண்டும் தலையெடுத்துள்ளது. அனைவரும் விழிப்புடன் இருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே, இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றார் திரு ராஜாமணி.
பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்லுதல், கூட்டமாகச் செல்லுதல், வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இருத்தல் போன்ற காரணங்களால், மாவட்டத்தில் மீண்டும் தொற்றின் இரண்டாம் அலை வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் வருகையாளர்கள் முகக்கவசம் எதுவும் அணியாமல் கூட்டமாகக் கலந்துகொண்டதும் தொற்றுப் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

