தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செய்திக்கொத்து

3 mins read

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு நிலையங்கள்

சென்னை: 'நீட்' முதுகலைத் தேர்வுக்கு மாணவர்கள் இணையத்தில் பதிவுசெய்யும் போது தமிழக, புதுச்சேரி நிலையங்கள் கிடைக்காமல் மற்ற மாநிலங்களில் உள்ள நிலையங்களுக்குப் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்குமே தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்க தேசிய தேர்வுக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. "நீட் முதுகலைத் தேர்வுகளுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி

4 மணி நேரத்திற்குள்ளாகவே நிரம்பிவிட்டதைச் சுட்டிக்காட்டி சு. வெங்கடேசன், தேர்வர்கள் அனைவருக்கும் தமிழகம், புதுச்சேரியிலேயே நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமென பிப்ரவரி 24ஆம் தேதி கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். அக்கோரிக்கையை தேசிய தேர்வுக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தற்போது பதில் அளித்துள்ளது.

கரூரில் திமுக, அதிமுக கட்சியினர் கடும் மோதல்

கரூர்: கரூரில் தேர்தல் பரப்புரையின்போது திமுக-அதிமுக ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளர் உட்பட 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பலத்த காயமடைந்தனர்.

கரூர் நகரின் 25வது வார்டு பகுதியான மாவடியான்கோவில் தெருவில், அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் சனிக்கிழமை இரவு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்ததாகக்கூறி திமுகவினர் அமைச்சரின் வாகனத்தை மறித்துள்ளனர். அப்போது, இரு கட்சிக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த மோதலில், அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உட்பட அதிமுகவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கடுமையான காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.

தே.மு.தி.க., துணைச் செயலர் சுதீஷுக்கு

கொரோனா தொற்று பாதிப்பு

சென்னை: தே.மு.தி.க துணைச் செயலர் சுதீஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ்; கட்சியின் துணைச் செயலராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் விருத்தாச்சலம் சென்றார். தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் பிரேமலதாவின், வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். உடல் சோர்வாக இருந்ததால் அன்றிரவு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்குத் திரும்பினார். சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கோயில்களில் தொற்று விதிமுறைகள்

கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்

சென்னை: தமிழகக் கோவில்களில் கொவிட்-19 தொற்று பரவாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்குமாறு கோவில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

"கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, சரியான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாததே காரணம். வரும் காலங்களில் கோவில்களில் அதிக அளவிலான திருவிழாக்கள் நடக்க உள்ளன. இதை கருத்தில்கொண்டு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம்.

"எனவே, முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல் போன்ற வழிகாட்டி நெறிமுறைகளை கோயில் ஊழியர்களும் பக்தர்களும் தீவிரமாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்," என்று அறநிலையத்துறை கோயில்களைக் கேட்டுக்கொண்டது.