செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9281a380-7d2c-4b33-99ba-8700f160613b
-

'சால்வை, பூங்கொத்துகள் வேண்டாம்'

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் "கொரோனா இரண்டாவது அலை தொடர்வதால் பொதுமக்களும் போதிய விழிப்போடு இருக்கவேண்டும். கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்கவேண்டும்," என்று பதிவிட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி: 70 ஆண்டுகளில் இல்லாத அளவு விலைவாசி உயர்வு

சென்னை: பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியபோது, "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்வு காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன," என குறை கூறியவர், திமுக கூட்டணி வெற்றிபெற்று, தமிழகத்தை ஸ்டாலின்தான் ஆட்சி செய்வார் என்றும் கூறினார்.

100% வாக்களிக்கும்படி நடிகர் சூர்யா

சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

திருப்பூர்: திருப்பூரில் நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இம்மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவினாசி ஆகிய தொகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர்க்கும் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அம்பேத்கர் கொள்கை வெற்றிபெற வாக்களிக்கும்படி கோரிக்கை

சென்னை: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் இளவஞ்சி, "அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகள் தமிழகத்தில் மீண்டும் காலூன்ற நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வேண்டும்," என்று பிரசாரம் செய்தார்.

"மக்களை உழைத்து முன்னேற விடாமல் இலவசங் களைக் கொடுப்பதாகக் கூறி ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன. அவற்றை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்," என்றும் திரு.வி.க. நகர் வேட்பாளரான டாக்டர் இளவஞ்சி மக்களிடம் கோரினார்.

'இளைஞர் படையினர் இருக்கும்வரை அதிமுகவை அசைக்க முடியாது'

ஈரோடு: மாணவர்களின் வங்கிக் கடனை அரசே ஏற்றுக்கொள்ளும். அத்துடன், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அைனத்து மாணவர்களுக்கும் சத்துணவுடன் பாலும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் வாக்கு சேகரித்தார். கோபிசெட்டிப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரான இவர் நம்பியூர், கோசணம் பகுதியில் பேசியபோது, "ஓடுகின்ற பாம்பை மிதிக்கின்ற இளைஞர் படையினர் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது," என்று கூறி பிரசாரம் செய்தார்.

'இளைஞர்களுக்கு அரசு வேலை உறுதி'

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வி.சரோஜா திறந்த வாகனத்தில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேங்கல்பாளையம் பகுதியில் பேசிய சரோஜா, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.