சென்னை: அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி அளித்துள்ள புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதில், தமிழக அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தகுந்த நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடும் கரூர் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் அதிகளவில் நடப்பதாகச் சொல்கிறது திமுக.
குறிப்பாக இணையம் வழி பணப்பரிமாற்றம் செய்வதற்கு பயன்படும் புதிய செயலிகளைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது என்பது திமுகவின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் திமுக சுட்டிக்காட்டி உள்ள தொண்டமுத்தூர் தொகுதியில் மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் பரிவர்த்தனைகளைக் கண்டறிய முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முறைகேடுகளை தடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது ரூ.1.93 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தனியார் வங்கிக் கிளையில் ஒப்படைப்பதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து அந்தத் தொகை வேனில் கொண்டு செல்லப்பட்டபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

