செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
71893c7c-2ba8-4689-ba4b-ac7991e83ee4
-

தேமுதிக அலுவலகத்துக்கு மிரட்டல்

சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் நேற்று முன்தினம் அங்கு பதற்றம் நிலவியது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியவர் இந்த மிரட்டலை விடுத்தார். விரைந்து சென்ற போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும் அம்மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. விசாரணையை அடுத்து திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் மிரட்டல் தொடர்பாக கைதாகியுள்ளார்.

மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்

நாகை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். நாகை மீனவர்கள் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் இரண்டு இயந்திரப் படகுகளில் வந்ததாகவும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்களைப் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்றபோது அவர்கள் தாக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியது கடற்கொள்ளையர்கள் என்றும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

4,220 பேர் தேர்தலில் போட்டி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,220 பேர் போட்டியிடுகின்றனர். அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும் குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டி களத்தில் உள்ளனர். சென்னையில் அடங்கி உள்ள 16 தொகுதிகளில் 391 பேர் களம் காண்கின்றனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களம் காணும் கொளத்தூர் தொகுதியில் 35 பேரும் குறைந்தபட்சமாக தியாகராயநகரில் 14 பேரும் போட்டியிடுகின்றனர். இம்முறை தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் படித்தால்தான் அரசு வேலை

மதுரை: அரசுப் பணிகளுக்கான கல்வித்தகுதியைப் பெற ஒருவர் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே 20 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலை வழங்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் படிப்பவர்கள் முழுமையாக தமிழ் வழியில் படிப்பதில்லை என்றும் அவர்களை தமிழ் வழியில் படித்தவர்களாக கருத முடியாது என்றும் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.