புனே: இந்திய அணியின் தவான் (98), விராத் கோஹ்லி (56), கேஎல் ராகுல் (62 நாட்அவுட்), குருணால் பாண்டியா (58 நாட்அவுட்) ஆகியோர் அரைசதம் அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் 318 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கினர்.
பேர்ஸ்டோவ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் இணை முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 135 ஓட்டங்களைக் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு ஓட்டத்தில் ஏமாற்றம் அடைந்தார்.
இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். பேர்ஸ்டோவ் 94 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். அவர் 66 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சருடன் அந்த ஓட்டங்களை எடுத்தார்.
அதன்பின் இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
மோர்கன் 22 ஓட்டங்களிலும், பட்லர் 2 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 18 ஓட்டங்களிலும், மொயீன் அலி 30 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 12 ஓட்டங்களிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 ஓவரில் 251 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 ஓவரில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவி 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
10,000 ஓட்ட சாதனை: சொந்த மண்ணில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் கோஹ்லி.
குருணாஸ் அரைசத சாதனை: அறிமுக வீரர் குருணாஸ் பாண்டியா, 26 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் இவர்தான்.
இந்நிலையில் காயமடைந்த இங்கிலாந்து வீரர்கள் ஆன் மோர்கன், சேம் பில்லிங்ஸ் ஆகிய வீரர்கள் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கலந்துகொள்வது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
மோர்கனுக்கு பெருவிரலிலும் ஆள்காட்டி விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆள் காட்டி விரலில் தையல் போடும் அளவுக்குக் காயம் உள்ளதாகவும் பில்லிங்ஸுக்கு தோல்பட்டையில் காயம் மூட்டுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

