தஞ்சாவூர்: கல்விக் கூடங்களில் கொவிட்-19 பரவும் அபாயம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த ஏழு மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 58 மாணவிகள், ஓர் ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோரில் 9 பேருக்குத் தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. அதன் பின்பு கும்பகோணத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ஆலத்தூர், தஞ்சாவூர் பள்ளி, தஞ்சாவூர் மகர் நோன்புச்சாவடி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் தொற்று அதிகரிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று 1,152 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி, தென்காசி, நாங்குநேரியில் தலா 2 பேருக்கும், மாநகராட்சிப் பகுதி, பாப்பாக்குடி, பாளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் என 9 பேருக்குத் தொற்று உறுதியானது.
4,024 வேட்பாளர்கள் போட்டி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 250-க்கும் கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதில், 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2,720க்கும் கூடுதலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின்
சென்னை: ராகுல்காந்தி- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு சேலத்தில் 28ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம், சீலன்நாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை 28ஆம் தேதி மாலை
4 மணிக்கு இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
மீண்டும் தமிழகம் வரும் பிரதமர்
சென்னை: பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு முறை வந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 30ஆம் தேதி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகனை ஆதரித்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் ஒரே மேடையில் பேச உள்ளார். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
அ.தி.மு.க., பாஜக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும்கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.
கமல்ஹாசன் தொகுதியில் சரத்குமார்
கோயம்புத்தூர்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நாளை கோவை மண்டலத்தில் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களிலும் இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்குத் தொகுதியில் அவரை ஆதரித்து இன்று சரத்குமார் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
அதிமுக எம்.பி. ஜான் காலமானார்
சென்னை: அ.தி.மு.க. மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் 72 வயது முகமது ஜான். அவர் 2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத் தேர்தலையொட்டி வாலாஜா அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.

