திருச்சி: தேர்தல் நடப்பதற்கு முன்பு மக்களிடம் வாக்கு கேட்டு வரும் ஒரு சில வேட்பாளர்களை, அதன்பின்னர் "கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு" என்று அறிவிப்பு வெளியிட்டால்தான் அவர்கள் வெளி உலகுக்கே தெரியவருவார்கள்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுள் ஒருவர்தான் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு என்று அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
"திமுக கூட்டணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருச்சி எம்.பி. திருநாவுக்கரசை தேர்தலுக்குப் பிறகு நீங்கள் யாராவது தொகுதியில் பார்த்திருக்கிறீர்களா? அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் நான் உங்களுக்கு பரிசு தருகிறேன்," என்று அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான என்.நடராஜன் தனது பிரசாரத்தை திருச்சியில் உள்ள பெரிய கடைவீதி, பைரவர் கோவில் அருகில் தொடங்கினார்.
அங்குள்ள பல்வேறு பகுதிகளி லும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து, பிரசாரத்தில் பேசிய அவர் கூறுகையில், "இப்போது திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரும் வெளியூரைச் சேர்ந்தவர்தான்.
"திருநாவுக்கரசு எம்பியைத் தேடுவது போல் அவரையும் தேடவேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வரும்," என்று கூறிய அமைச்சர், "என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம். ஏனெனில், நான் உங்கள் வீட்டிற்கு அருகில்தான் உள்ளேன். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்," என்று மக்களிடம் கோரினார்.

