சிறுமிகளிடம் நிதி பெற்ற வேட்பாளர்

சிறுமிகளிடம் நிதி பெற்ற வேட்பாளர்

1 mins read
2294803e-ffd5-4973-a482-428a29b9107b
-

திருப்பரங்குன்றம்: தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள்தான் பல அன்பளிப்புகளைக் கொடுத்து வாக்குகளைப் பெறுவர்.

ஆனால், இந்தமுறை ஒரு பெரும் வித்தியாசமாக வேட்பாளருக்கு இரு சிறுமிகள் தங்களது உண்டியல் பணத்தை தேர்தல் நிதியாக வழங்கி உள்ளனர்.

தமிழக தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யிருக்கும் வேட்பாளர்களில் ஒருவராக திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் விளங்குகிறார்.

இவர் தனது கணவரின் ஆட்டோவில் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து பிரசாரம் செய்கிறார்.

இதற்கிடையே பிரசாரத்தின் போது பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து தரும் நிதியுதவியைப் பெற்று அதைப் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் பேத்தி பத்தாம் வகுப்பு மாணவி சுகன்யா, தாம் சேமித்து வைத்திருந்த ரூ.2,000 பணத்தை பொன்னுதாய்க்கு தேர்தல் நன்கொடையாக அளித்தார்.

அதேபோல், அவனியாபுரத்தில் பெட்டிக்கடை நடத்தும் முருகன் என்பவரின் 4 வயது பேத்தி தன்யாஸ்ரீயும் உண்டியலில் சேமித்த ரூ. 1,000 ரூபாயை தேர்தல் நிதியாக அளித்தார். பொன்னுத்தாய் நெகிழ்வுடன் சிறுமிகள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டார்.