வாகனச் சோதனையின்போது 6.84 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
புதுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 'கொரியர்' வாகனம் ஒன்றை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதில் சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ 843 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ஏறக்குறைய ரூ.3 கோடியே 17 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீமான்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் இலவசம்
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி தனித் தொகுதி யில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தீயசக்திகளின் ஆட்சி முறையை மாற்றி தூய சக்திகளின் ஆட்சிமுறையைக் கொண்டு வரவேண்டும் என்பதே எங்களது தலையாய இலக்காகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறிவு வளத்தை தருகின்ற கல்வியையும் உயிர்காக்கும் மருத்துவத்தையும் இலவசமாகத் தருவோம்,'' என்று கூறிய சீமான், "குடிநீர் விற்பனைக்கும் பாட்டில் தண்ணீருக்கும் தடை விதிக்கப்படும். வீடுகளில் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவோம். கல்வி, மருத்துவம் இலவசம் என்பதால் அதிக சம்பளம் வழங்கப்பட மாட்டாது," என்று கூறினார்.
பிரியங்கா வருகையில் மாற்றம்
சென்னை: கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் விஜய் வசந்தையும் அந்த மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக வேட்பாளர் களையும் ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி இன்று முதல்முறையாக கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார். ஆனால், பிரியங்கா காந்தியின் வருகை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை வேளச்சேரியில் பிரியங்கா காந்தியின் சகோதரர் ராகுல் காந்தி நாளை 28ஆம் தேதி பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
1,000 கிலோ ஆப்பிள் மாலை வரவேற்பு
சென்னை: சென்னை பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திறந்த வாகனத்தில் சென்றபடி குரோம்பேட்டையில் பிரசாரம் செய்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் அவருக்கு ஆயிரம் கிலோ எடையிலான ராட்சத ஆப்பிள் மாலையை பாரந்தூக்கி மூலம் அணிவிப்பது போல் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துணி துவைத்துத் தந்த வேட்பாளர்
நாகப்பட்டிணம்: நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தங்க. கதிரவன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலில் வெற்றிபெற்றால் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என கைகளில் துணிதுவைத்தபடி வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் துணி துவைக்கும் காெணாளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
'பிரதமரால் 11 மருத்துவக் கல்லூரிகள்'
ஈரோடு: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சி.கே. சரஸ்வதியை ஆதரித்து தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வாக்கு சேகரித்தார்.அப்போது பேசியவர், "திரும்பிப் போ மோடி' என்று எதிர்ப்புக் கருத்துகளைப் பதிவிட்ட வலைத்தளவாசிகளுக்கு மத்தியில், தமிழக மக்களின் நலனுக்காக 11 மருத்துவக் கல்லூரிகளையும் 12 'ஸ்மார்ட்' நகரங்களையும் இதே மோடி அரசுதான் கொடுத்துள்ளது," என்று தெரிவித்தார்.

