செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f8cc4b64-f83b-4b3b-bbfb-84b02c34d914
நடிகை நமீதா வுடன் வானதி சீனி வாசன்.படம்: ஊடகம் -

'டிரம்செட்' இசைத்து பிரசாரம்

தேனி: தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 'ட்ரம்செட்' இசைத்து வாக்குச் சேகரித்தார். திறந்தவெளி லாரியில் திருநங்கைகளின் ஆட்டம்பாட்டத்துடன் தொடங்கிய பிரசாரத்தில் 'ட்ரம்செட்' இசைக்கப்பட்டதால் சர்ச் தெரு, கீழத்தெரு, கட்டபொம்மன் சிலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 'பேண்ட்செட்' கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இசைக்கு ஏற்றவாறு அங்கிருந்த பெண்களும் சிறுவர்களும் உற்சாகமாக நடனமாடினர்.

நடிகை நமீதாவுடன் நடனமாடியபடி வாக்கு கேட்ட வானதி சீனிவாசன்

கோவை: கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், நடிகை நமீதாவுடன் சேர்ந்து நடனமாடியபடி வாக்குச் சேகரித்தார். பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேளதாளத்துக்கு ஏற்ப அவர்கள் இருவரும் நடனமாடினர்.

நடிகை நமீதா தொடர்ந்து பேசியபோது, "அதே தொகுதியில் வானதியை எதிர்த்துப் போட்டியிடும் கமல்ஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் நம்பிக்கையும் கலாசாரமும் கொண்ட தமிழக மக்கள் எவ்வாறு நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு வாக்களிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியவர், "தாமரைக்கு வாக்கு அளியுங்கள் மச்சான்," என்று கேட்டுக்கொண்டார்.

நீங்கள் வந்தால் மட்டும் விலைவாசி குறைந்துவிடுமா? என்று கேள்வி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செங்குட்டுவன், திமுக ஆட்சியின்போது இருந்த பொருள்களின் விலையையும் இப்போது மளமளவென ஏறியுள்ள விலையையும் ஒப்பிட்டுப் பேசியவர், "மாரியாத்தா சத்தியமா எனக்கு வாக்களிப்பீர்களா?" என்று கேட்டார். அப்போது குறுக்கிட்ட ஒரு பெண், "நீங்கள் வருவதால் மட்டும் விலைவாசி எல்லாம் குறைந்துவிடவா போகிறது?" என்று திருப்பிக் ேகட்டார். அதற்கு நான் என்ன பத்திரமா எழுதித் தரமுடியும் எனக் கேட்டு வேட்பாளர் செங்குட்டுவன் சமாளித்தார்.

பொதுமக்களுக்கு கரும்புச் சாறு வழங்கிய வேட்பாளர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் அவரது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது கரும்புச்சாறு தயாரித்து விற்கும் கடைக்குச் சென்ற எழிலரசன், பொதுமக்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார்.