தர்மபுரி: வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 18 இடங்களில் இரு நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரு. 3.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாக புகாரளிக்கப்பட்டதால் இந்தச் சோதனைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சென்னையிலும் தர்மபுரியிலும் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினருக்குச் சொந்தமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.6 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான டி.என்.சி. இளங்கோவனுக்குச் சொந்தமான நிதி நிறுவனங்கள், பள்ளிக்கூடம், திரையரங்கம் உள்ளிட்டவற்றில் நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தனர்.

