சேலம்: முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது அதிமுகவினர் அளித்த புகாரைத் தொடர்ந்து மூன்று பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பழனி சாமியை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து சேலத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரின் தொகுதியான எடப்பாடியிலும் அதிமுகவினர் கறுப்புக்கொடி பேரணியில் ஈடுபட்டனர்.
ராசாவின் உருவ பொம்மையை எரித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் அயனாவரத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இது போன்ற போராட்டங்கள் மாநிலம் எங்கும் நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் பிரசாரத்தில் பேசிய ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வரையும் ஒப்பிட்டுப் பேசினார்.
"ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து முதல்வர் வேட்பாளராகவும் நாளைய முதல்வராகவும் வரவுள்ளார். அவர் முறையாகப் பிறந்தவர் என்றும் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர்," என்றும் விமர்சித்திருந்தார்.
ஆ.ராசாவின் இந்த சர்ச்சை பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய அதிமுகவினர், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தனர்.

