செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e38facac-9a58-4c17-98fa-ef87e973bf13
-

இறகுப் பந்து விளையாடிய வேட்பாளர்

சென்னை: சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம், கொண்டிதோப்பு பகுதியிலுள்ள சிவஞானம் பூங்காவில் இளையர்களுடன் இறகுப் பந்து விளையாடி வாக்கு சேகரித்தார்.

"திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் துறைமுகம் தொகுதியில் 'பாஜகவால் விழுந்த துவாரம்' என ஊடகங்களில் தலைப்புச்செய்தி வருமளவுக்கு எங்களது வெற்றி அமையும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அமைச்சர் 45 கி.மீ. நடைப்பயண பிரசாரம்

திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 45 கிலோமீட்டர் பிரசார நடைப்பயணத்தை டி.கல்லுப்பட்டியில் இருந்து தொடங்கினார். 324 கிராமங்கள் வழியாக தொடர்ந்த இந்தப் பயணம் திருமங்கலத்தில் நிறைவுபெற்றது.

ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் இந்த நடைப்பயண பிரசாரத்தில் கலந்து கொண்டு மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

மீன்கள் விற்றும் இட்லி அவித்துக் கொடுத்தும் வாக்குச் சேகரிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியுடன் கைகோத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கல்யாணி என்பவர் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் மீன் வண்டியை ஓட்டி மீன்களை விற்பனை செய்தும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் இட்லி அவித்துக்கொடுத்தும் பிரசாரம் செய்தார். இவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த மகளிரணியினர் ஆடிய ஆட்டத்தால் அந்த இடமே களை கட்டியது.

டி.ராஜேந்தர்: தேர்தலில் எனது கட்சி ஆதரவு யாருக்கும் இல்லை

சென்னை: நடக்கவுள்ள தேர்தலில் லட்சிய திமுக கட்சி யாரையும் ஆதரித்து, அரவணைக்காது என்று அக்கட்சியின் தலைவரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

"கொள்கையைச் சொல்லி வாக்கு கேட்டதெல்லாம் அந்தக் காலம். கொடுக்கவேண்டியதைக் கொடுத்து வாக்கை வாங்கிக்கொள்வதுதான் இந்தக் காலம். காலமும் சரியில்லை. களமும் சரியில்லை என்பதால், கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க உள்ளேன். அத்துடன், இது கொரோனா காலமாகவும் உள்ளது. பாதுகாப்புக்கு அணியவேண்டும் முகமூடி. பக்குவப்பட்டவனாய் வாழ அமைதி காக்கவேண்டும் வாய்மூடி," என்கிறார்.

அமைச்சர்: இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 தருவது உறுதி

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவர், திறந்த வேனில் கிராமம், கிராமமாகச் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டியபோது, "அதிமுகவின் ஆட்சி தொடரும் நிலையில், முதல்வரின் அறிவிப்பின்படி இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். இது உறுதி. நாங்கள் செய்வதையே சொல்வோம்," என்று நம்பிக்கை அளித்தார்.

தர்ப்பூசணி வியாபாரியான எம்எல்ஏ

திருப்பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட மதுரமங்கலம் கிராமத்தில் வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளரும் எம்எல்ஏவுமான பழனி வாக்கு சேகரித்தார். அப்போது அவர், தள்ளுவண்டியில் தர்ப்பூசணிப்பழம் வியாபாரம் செய்பவரிடம் கத்தியை வாங்கி அதை கீற்று கீற்றாக மக்களுக்கு வெட்டிக்கொடுத்து திடீர் வியாபாரியானார். முன்னதாக குன்றத்தூரில் வாக்கு சேகரித்த பழனி, அங்குள்ள மைதானத்தில் சிலம்பம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் சிலம்பத்தை வாங்கி அதை லாவகமாகச் சுழற்றி அசத்தினார்.

ராமதாஸ் குறித்து பேசுகையில் கண்கலங்கிய வேட்பாளர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜேந்திரன், புதுப்பாளை யம் கிராமத்தில் வீதிவீதியாகவும் வீடுவீடாகவும் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது மக்களிடையே பேசத் தொடங்கிய ராஜேந்திரன், தனக்கு வாய்ப்பளித்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குறித்துப் பேசும்போது கண்கலங்கினார்.