தாராபுரம்: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 'வெற்றி வேல், வீரவேல்' என்று முழங்கி தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு 'வேல்' ஒன்றை பரிசாக தமிழக பாஜக தலைவர் முருகன் வழங்கினார்.
இதையடுத்து 'வெற்றிவேல், வீரவேல் என முழங்கி பிரதமர் மோடி ேபசினார்.
"ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் ஒரு சில வார்த்தைகள் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாசாரத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுகிறது.
"நாங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாக வைத்து வாக்கு கேட்கிறோம். தமிழ்மொழி, கலாசாரத்தை வளர்ப்பதற்காக மருத்துவம், அறிவியலை தாய்மொழியில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவேந்திர குல வேளாளர் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளோம்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
"ஆனால் காங்கிரஸ்-திமுக கூட்டணி, வாரிசு அரசியலை அவர்களின் முக்கிய திட்டமாக வைத்து உள்ளது.
"திமுக காங்கிரஸ் கூட்டணியினர், முதல்வரின் தாயாரை அவமானமாகப் பேசி உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை இன்னும் இழிவு படுத்துவார்கள். பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிர்வாகிகளை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்து உள்ளனரா?
"பெண்களை அவமானப்படுத்துவதே திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம். சில நாட்களுக்கு முன்னர், திண்டுக்கல் லியோனி, பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அவரை திமுக தடுக்கவில்லை. திமுகவில் மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டியுள்ள இளவரசர், பெண்களை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசினார். அவரையும் திமுக தடுக்கவில்லை. ஜெயலலிதாவை, சட்டசபையில் திமுக தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது," என்றும் அவர் கூறினார்.
"சமுதாய வளர்ச்சி என்பது பெண்கள் வளர்ச்சி இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால் அனைத்து திட்டங்களையும் பெண்களை வலிமைபடுத்துவதாக அமைத்துள்ளோம். புதிதாக எரிவாயு இணைப்புகள் தமிழகத்தில் மட்டும் 32 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டத்தில் கிராமப்புற 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதியில் 3.8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் பெண்கள் பெயரில் இருக்க ஊக்கப்படுத்துகிறோம். அவர்களின் மரியாதையை லட்சியத்தை ஊக்கப் படுத்தும். மகளிர் பேறுகால உதவி திட்டத்தின் கீழ் 10 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

