பெங்களூரு: போலியான ஆவணங்களை வழங்கி கடன் வாங்க உத்தரவாதம் அளித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் இயக்கிய கோச்சடையான் படத்தை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரித்தது.
பணம் போதவில்லை என்றதும் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கடன் வாங்க முயற்சி செய்தது. இதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவிடம் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் உதவி கேட்டது. அதற்கு லதா ரஜினிகாந்த், பல்வேறு ஆவணங்களைக் கொடுத்து ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் கடன் வழங்க பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
லதா வழங்கிய ஆவணங்களை ஏற்று கொண்டு ஆட் பியூரோ நிறுவனம் ரூ.6.84 கோடி கடன் வழங்கியது. ஆனால் அந்தக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் திணறி யது.
இது குறித்து லதா ரஜினிகாந்திடம் கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆட் பியூரோ நிறுவனம், ''லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. இதனால் எங்களுக்கு ரூ.6.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லதா ரஜினிகாந்த் வழங்கவேண்டும்,'' என்று பெங்களூரு அல்சூர்கேட் போலிசில் புகார் அளித்தது.
இதையடுத்து லதா ரஜினிகாந்த் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரு 2வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்குத் தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலிசார் தாக்கல் செய்துள்ளனர்.

