மோடிக்கு ஆதரவும் எதிர்ப்பும்
சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக 'ஹேஷ்டேக்குகள்' இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றன.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போது எல்லாம் 'GoBackModi' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் பிரபலமாகிவிடும். அதேபோல் இம்முறையும் நேற்று அதிகாலையிலிருந்து 'GoBackModi' ஹேஷ்டேக் டுவிட்டரில் பரவி வருகிறது. அதே நேரத்தில் மோடியை வரவேற்கும் விதமாக 'TNWelcomesModi' என்னும் ஹேஷ்டேக்கும் பிரபலமாகி வருகிறது.
சென்னையில் தொற்று அதிகரிப்பு
சென்னை: சென்னையில் மீண்டும் கிருமித் தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்க நகைப்பட்டறையில் பணியாற்றும் மேற்கு வங்க தொழிலாளர்கள் 54 பேரில் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 22 பேரும் தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
'மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்'
சென்னை: திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
"மத்திய அரசு மற்றும் அதிமுக அரசால் கசக்கிப் பிழியப்படும் தமிழக மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கித் தரப்படும். சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் வாயிலாக 'நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்," என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை
ரூ.364 கோடி பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுப்பதற்காக வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் தமிழகம் முழுவதும் ரூ.364 கோடி வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
அமைச்சரின் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் மட்டும் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'வன்னியர் ஒதுக்கீடு நிரந்தரம்'
சென்னை: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்கு வதற்கான சட்டம் தற்காலிகமானது என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர். அதை சில ஊடகங்கள் திரித்து வெளியிடுவதை விஷமப் பிரசாரமாகவே பாமக பார்க்கிறது. வன்னியர்களுக்கான இடப்பங்கீடு என்பது சாதிப் பிரச்சினை அல்ல. அது சமூகநீதி சார்ந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த மாதம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதற்கு தமிழக ஆளுனரும் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம்தான் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

