கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்று அதிகரித்துக்கொண்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி 2,279 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சென்னையில் மட்டும் 815 பேர் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மார்ச் 17 முதல் மார்ச் 30 வரை 22,665 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அங்கு கொவிட்-19 பரவாமல் தடுக்கும் வகையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் தற்போதுள்ள உள்ள தளர்வுகளுடனான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீவிர கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்தது. அத்துடன் தொற்றின் தடம் அறியும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு கட்டுப்பாட்டு மண்டலங்களை சுகாதாரத்துறையின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி அதிகாரிகள் கவனமாக எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நகராட்சி அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் தமிழக அரசு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை மாவட்ட நகராட்சி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "தொற்று பரவலைத் தடுக்க வெளியில் செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்வதோடு தனிமனித சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"வெளியில் மட்டுமின்றி, கோயில், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். சமயக் கூட்டம், உள்அரங்க நிகழ்வுகள் அரசியல் கூட்டங்களால் தொற்று அதிகரித்து வருகிறது" என்று அவர் கூறினார்.
முக்கியமாக தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து வருமாறு வலியுறுத்த வேண்டும். சென்னையில் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏப்ரல் 2ல் மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகிறது என்று திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

