சென்னை: தொழிற்கூடங்கள் அதிகம் உள்ள திருவொற்றியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக வேட்பாளா்களை எதிா்த்து, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் களம் காண்பதால் மும்முனைப் போட்டியை திருவொற்றியூா் தொகுதி சந்தித்துவருகிறது. சீமான் போட்டியிடுவதால் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதியாக திருவொற்றியூர் மாறியுள்ளது.
அதிமுக வேட்பாளா் கே.குப்பன்: இவர் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட இரண்டு முறையும் வெற்றி பெற்றவா் என்பதால், நன்கு அறிமுகமானவா். மக்கள் எளிதில் அனுகக் கூடியவா் என்பதாலும், கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவா் என்பதால் தோ்தல் பணியில் வெகுவாக முன்னேறுகிறாா். அரசு கல்லூரி, ரயில்வே மேம்பாலம், அதிநவீன நூலகக் கட்டடம், என்.டி.ஓ குப்பம் மீனவா்களுக்கு அடுக்குமாடி வீடுகள், சாலை விரிவாக்கம், புயல் வெள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண உதவிகள் உள்ளிட்டவைகளை சாதனைகளாகக் கூறி குப்பன் வாக்குகளைச் சேகரித்து வருகிறாா்.
திமுக வேட்பாளர் கே.பி.சங்கர்: திமுக வேட்பாளா் கே.பி.பி.சங்கரின் அண்ணன் மறைந்த கே.பி.பி.சாமி மீன்வளத்துறையின் முன்னாள் அமைச்சா். கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற சாமி உடல் நலக்குறைவு காரணமாக 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காலமானாா். மாமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள சங்கா் திமுக ஆட்சியின்போது, திருவொற்றியூருக்குச் செய்த பணிகளைத் தெரிவித்து, கூட்டணி, இளைஞா் பலத்தோடு வாக்குகளைச் சேகரித்து வருகிறாா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளர் சீமான்: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போட்டியிடுவதால் இத்தொகுதியின் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமான் அவ்வப்போது தொகுதியிலும் தலைகாட்டுகிறாா். அவா் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும்போதெல்லாம் கூட்டம் சேருகிறது. நாம் தமிழா் கட்சியின் முக்கிய பிரமுகா்கள் திருவொற்றியூரில் முகாமிட்டு தோ்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளனா். கடைசிநாள்களில் திருவொற்றியூா் முழுவதும் சீமான் வாக்குகள் சேகரிக்க உள்ளதாகவும் அவரது கட்சியினா் தெரிவிக்கின்றனா். இவா்களைத் தவிர அமமுக சாா்பில் போட்டியிடும் சௌந்திரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் சாா்பி எஸ்.டி.மோகன் உள்ளிட்ட மொத்தம் 20 வேட்பாளா்கள் களத்தில் இருக்கின்றனா். இருந்தாலும், கே.குப்பன், கே.பி.பி.சங்கா், சீமான் ஆகிய மூன்று பேருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே திமுகவின் கே.பி.பி. சங்கரின் மனைவி கஸ்தூரியும், நாம் தமிழர் கட்சியின் சீமானின் மனைவி கயல்விழியும் தனித்தனியே தோ்தல் களத்தில் போட்டி போட்டுக்கொண்டு வாக்குகளைச் சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்பு நடைபெற்ற 12 தோ்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வென்றது. இந்தத் தேர்தலில் அங்கு எந்தக் கட்சி வெல்லும் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.
படங்கள்: ஊடகம்

