கோவை: கோவை மாட்டத்தில் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் கிருமிப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர், "கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையின் கீழ் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இதுவரை 50,227 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது," என்றார்.
இந்த நிலையில் கொரோனாவுக்குக் கடிவாளம் போட இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து (இன்று) நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை தொடங்கவுள்ளோம்.
"குறிப்பிட்ட அளவு தடுப்பூசியை பொதுமக்கள் வசிக்கும் தெருக்களுக்கு எடுத்துச் சென்று போடும் பணியை தொடங்கியுள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்," என்று அந்த அதிகாரி கேட்டுக் கொண்டார்.
இதுவரை கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக் கையையும் அவர் விவரித்தார்.
"மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை கடந்த 4 நாட்களாக 180 முதல் 220 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
"ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் வீடுகளை ஒருங்கிணைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கிறோம்.
தற்போது வரை மாநகரில் 41 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக காருண்யா உயர் கல்வி நிலையம், பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் கொடிசியா வளாகத்தில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
"பாரதியார் பல்கலைக் கழக தங்கும் விடுதியில் 420 பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையிலும் கொடிசியாவில் 400 படுக்கை வசதியுடனும் சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் கொடிசியாவில் 2,000 பேர் வரை தங்க வைக்க முடியும். தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று அதிகாரி தெரிவித் தார்.

